×

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து..!!

சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1, இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 தேர்வு மையங்களில் 7.25 லட்சம் மாணவச் செல்வங்கள் இந்தப் பொதுத்தேர்வை எழுத உள்ளார்கள். இலட்சக்கணக்கான மாணவர்களை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இந்தப் பொதுத்தேர்வு விளங்குகிறது. நேரடியாக நடைபெறும் தேர்வுகள் தான் மாணவர்களின் திறன்களை மதிப்பிட உதவும்.

தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் பயமோ, பதட்டமோ கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும். இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாவிட்டாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்பு அடையத் தேவை இல்லை. அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண்களை பெறுவோம் என்ற நம்பிக்கையை, மனதிடத்தை பெற்றிட வேண்டும். நம்மை ஆளாக்க அயராது பாடுபடும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற பதட்டம் அடையத் தேவையில்லை. எந்தத் துறையில் சென்றாலும் நாம் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றவர்களாக வாழ்வதே பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு என உணர்ந்து தேர்வு எழுதிட வேண்டும். ஆகவே, தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Madhyamik General Secretary ,Vaiko ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்